தாத்தா பேரனுக்கு எழுதிய சொத்து ரத்து…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 101). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி திண்டிவனம் சப்-கலெக்டர் அனுவிடம் ஒரு மனு அளித்தார்.

அதில் வயதான காலத்தில் என்னை பராமரித்து கொள்வதற்காக எனக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை 2008-ல் என் மகன் வழி பேரன் மாசிலாமணிக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தேன். ஆனால் அவர் என்னை பராமரிக்கவில்லை.

வயதான காலத்தில் தனியாக கஷ்டப்பட்டு வருகிறேன். அதனால் என் பேரனுக்கு நான் எழுதி கொடுத்ததான செட்டில்மென்ட் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்.

சப்-கலெக்டர் அனு, சின்னப்பனின் மகன்கள், மகள்கள் என 6 பேர் மற்றும் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் சின்னப்பன் தனியாக கூரை வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டு வருவதும், அவரை குடும்பத்தினர் யாரும் பராமரிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007, பிரிவு 23-ன் படி சின்னப்பன், மாசிலா மணிக்கு தானமாக எழுதி கொடுத்த பத்திரப்பதிவு எண்: 761/2008-ஐ ரத்து செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகல் சத்தியமங்கலம் சார் பதிவாளருக்கு அனுப்பப்பட்டது.