Sabarimala earns Rs.52.55 crore: சபரிமலையில் 10 நாட்களில் ரூ.52.55 கோடி வருமானம்

சபரிமலை : Sabarimala earns Rs.52.55 crore in 10 days. மண்டல காலம் தொடங்கி, 10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் கடந்த 17ம் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களில் தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களே அதிகம்.

இதனைக் கருத்தில்கொண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 10 நாட்களில் ரூ.52 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறுகையில், மண்டல பூஜை காலம் தொடங்கி 10 நாட்களில் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதுவரை மொத்த வருமானம் 52.55 கோடி ரூபாயாகும். இதில் அரவணை விற்பனை ரூ. 23.58 கோடி. காணிக்கை ரூ.12.74 கோடி. அப்பம் விற்பனையில் ரூ.2.58 கோடியும், அறை வாடகையாக ரூ.49 லட்சமும் கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி திருவிழா நிர்வாகத்துக்காக செலவு செய்யப்படுகிறது.

அடுத்த 20 நாட்கள் தேவைக்காக 51 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. தினமும் சராசரியாக இரண்டரை லட்சம் டின் அரவணை விற்பனையாகிறது.

பக்தர்களுக்கு எந்த குறையும் வராத அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீலிமலை பாதையில் உள்ள பணிகள் அடுத்த வாரம் நிறைவு பெறும். சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.