Young Woman Donated 135 Liters Breast Milk: 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த இளம்பெண்: சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்

கோவை: தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான நோய் (Young Woman Donated 135 Liters Breast Milk) எதிர்ப்பு சக்தி இருப்பது மட்டுமின்றி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

அது மட்டுமின்றி ஒரு சில தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின்னர் உடல் நல பாதிப்புகள் காரணமாக தாய்பால் சுரக்காத நிலையும் ஏற்படுகிறது. அதே சமயம் பிரசவத்தின்போது சில தாய்மார்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு தனிமையில் குழந்தைகள் தவிக்கும் நிலையும் உருவாகிறது. ஒரு சிலர் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

இது போன்ற இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பற்றி அறிந்திருந்தாலும் தாய்மார்கள் சிலர் தானம் அளிப்பதற்கு முன்வருவதில்லை. ஆனாலும் அதில் சில தாய் உள்ளம் கொண்ட பெண்கள் தாய்பால் தானமாக வழங்கி வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா 27, என்பவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஸ்ரீ வித்யா கூறும்போது, எங்களுக்கு அசிந்தியா 4 என்ற மகனும், 10 மாதம் ஆன ப்ரக்ருதி என்ற மகளும் இருக்கின்றனர். மகன் பிறக்கும் சமயத்திலேயே தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வை அறிந்தேன். ஆனால் அந்த சமயத்தில் என்னால தானம் செய்ய முடியாமல் போனது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் சில குழந்தைகள் உடல் எடையிலும், உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறக்கின்றனர். இது போன்ற சமயத்தில் அவர்களின் தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. பிறக்கின்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். எனவே தாய்ப்பால் கிடைக்காத நிலையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதற்கு தானம் அளிக்க முடிவு செய்தேன்.

அதன்படி திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக தாய்ப்பால் தானத்தை சமூக சேவை அடிப்படையில் நான் செய்து வருகிறேன். மகள் பிறந்த 5 வது நாளில் இருந்து தற்போது 10 மாதங்களாக சுமார் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளேன் என்றார். இவரது தாய்ப்பால் தானத்துக்காக இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ் சார்பில் பாராட்டு சான்றிதழும், விருதும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.