Vomiting, fainting in girl on birthday: பிறந்த நாளில் சிறுமிக்கு நேர்ந்த கதி.. பேக்கரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை: People besieged the bakery in Thiruvannamalai after the girl vomited and fainted after eating birthday cake. திருவண்ணாமலையில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பேக்கரி முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி ஒன்றில், சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடவுள்ளதாக கேக் ஒன்றை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை வாங்க்கிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த கேக்கை பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி வெட்டிவிட்டு அதனை சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சிறுமிக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கேக்கை எடுத்துக்கொண்டு, வாங்கிய பேக்கரிக்கு இளைஞர்கள் நேரில் சென்றுள்ளனர். பின்னர் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடையில் இருந்த நபர் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் பேக்கரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை ஆர்டிஓ வெற்றிவேல், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், டிஎஸ்பி குணசேகரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் வந்து பிறந்தநாளில் வெட்டப்பட்ட கேக்கை ஆய்வு செய்து அந்தக் கேக் கெட்டுப்போனதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேக்கரி மற்றும் அதன் அருகில் உள்ள பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.