‘Unity Run’ in Chennai: சென்னையில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ‘ஒற்றுமை ஓட்டம்’

சென்னை: ‘Unity Run’ in Chennai on the occasion of National Unity Day. இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான இன்று தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மை இந்தியா -2.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் இன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தகவல் தொடர்பகம், தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவகேந்திரா சங்கதன், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி ஆகியவை இணைந்து தேசிய ஒற்றுமை ஓட்டத்தை நடத்தியது.

இந்த ஓட்டத்தை மாநில முதன்மைக் கணக்காயர்(தணிக்கை-2) கே.பி.ஆனந்த், மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை, தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் மண்டல இயக்குநர் சி. சாமுவேல் செல்லையா, நேரு யுவகேந்திரா சங்கதன் மாநில இயக்குநர் என்.எஸ்.மனோரஞ்சன், டி ஜி வைஷ்ணவ கல்லூரி டாக்டர் எஸ்.சந்தோஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்துள்ள “இந்தியாவை ஒருங்கிணைத்து கட்டமைத்ததில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பங்கு” என்ற தலைப்பிலான கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய எம்.அண்ணாதுரை, மாணவர் பருவம் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். இந்த பருவத்தில் புதிய விஷயங்களை புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முயன்றவர்கள் அவரவர் வாழ்வில் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதால் புத்தகங்களை தேடிப் படிக்கும் பழக்கத்தை இந்த பருவத்திலேயே மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கே.பி.ஆனந்த், மொழிகளின் அருங்காட்சியகமாக இந்தியா திகழ்கிறது என்றார். சாதி, சமயம், இனம், மொழி, நிற பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது இந்தியாவின் பலம் என்றும் அவர் கூறினார். அதற்காக பெரும்பாடு பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். பல்வேறு மாகாணங்களை ஒன்றுபடுத்தி அமைப்பு ரீதியான நாடாக இந்தியாவை ஒருங்கிணைத்தார். இதனை உணர்வு ரீதியாக ஒன்றுபடுத்தும் பொறுப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் குடிமக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உண்டு என்றும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இதுபோன்ற நாட்களில் மாணவர்கள் உறுதிமொழியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் ஆனந்த் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பக சென்னை மண்டல இயக்குநர் ஜெ.காமராஜ், கள விளம்பர அலுவலர் கே. ஆனந்த பிரபு, உதவியாளர் எம். முரளி, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநில அலுவலர் டாக்டர் எம். செந்தில் குமார், டி ஜி வைஷ்ணவ கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏ. ரமேஷ், டி. உமாபதி, கே.கல்பனா தேவி, வி. சதீஷ் குமார், கே. வீரராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மை இந்தியா 2.0 உறுதிமொழியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.