Union Minister L.Murugan Speech: இந்தியா வல்லரசாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேச்சு

நாமக்கல்: Union Minister Dr L. Murugan urges citizens to join hands to make India a developed nation in the next 25 years. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக உயர்த்த அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மத்திய மக்கள் தொடர்பகம் நாமக்கல்லில் ஏற்பாடு செய்திருந்த தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை இன்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், 2047-இல் நூற்றாண்டு சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய ஆண்டுகளாகக் கருதப்படுவதால், தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை டாக்டர் எல். முருகன் நினைவுகூர்ந்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானம், ரயில் என உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், தமிழகத்தின் திருச்சி, மதுரை போன்ற நகரங்கள், விமான சேவைகளின் வாயிலாக நாட்டின் இதர பகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியாவிற்காகக் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சொந்தக் கப்பலை நிறுவிய சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் அதற்காக ஆங்கிலேயரால் தண்டிக்கப்பட்டு செக்கிழுத்ததை சுட்டிக் காட்டி, அவரது பாதையைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக டாக்டர் முருகன் தெரிவித்தார். முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்பு நூலை டாக்டர் எல். முருகன் வெளியிட்டார். மேலும், மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடிய அவர், பள்ளி, கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த மூலிகைக் கண்காட்சி, சிறப்பு தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கு இருந்த மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா. மல்லிகா, நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கே.பி. ராமலிங்கம், சென்னை பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை, சென்னை மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் ஜே. காமராஜ், புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.