Total Eclipse of the Moon on Tomorrow: நாளை முழு சந்திர கிரகணம்

சென்னை: Total Eclipse of the Moon on Tomorrow. முழு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இந்த நிகழ்வை காண முடியும்.

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

சந்திரன் உதிக்கும் நேரத்தில் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் கிரகணம் தெரியும். இருப்பினும், கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவ நிலைகளை இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் காண இயலாது. ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவு நாட்டின் கிழக்குப் பகுதிகளிலிருந்து காண முடியும். நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து பகுதி வடிவ நிலைகளின் முடிவு மட்டுமே தெரியும்.

இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் தெரியும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது. நாகாலாந்தின் கோஹிமாவில் மட்டுமே சந்திர கிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம். தமிழகத்தில் சென்னையில், 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தை காண இயலும்.

இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆ்டு அக்டோபர் 28ம் தேதி பார்க்க முடியும். மேலும் அது ஒரு பகுதி கிரகணம் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி இந்தியாவில் இருந்து கடைசியாக காணப்பட்ட சந்திர கிரகணம் ஆகும்.