Bear died: மூன்று பேரை கடித்து குதறிய கரடி உயிரிழப்பு

தென்காசி: The bear died after biting three people. தென்காசியில் 3 பேரை கடித்துக்குதறிய கரடி உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிவசைலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த வனப்பகுதி அருகே அமைந்துள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக கடந்த 6ம் தேதி அதிகாலை வியாபாரி ஒருவர் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்து குதறியது. வியாபாரியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியிலிருந்த சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் கரடியை விரட்டியுள்ளனர். ஆனால் எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் அவர்கள் இருவரையும் கரடி கடித்து குதறிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறைந்திருக்கும் கரடியைப் பிடிக்க வேண்டுமென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் ஏ.டி.எஸ்.பி.பொன்னரசு, தென்காசி வட்டாட்சியர் ஆதிநாராயணன், வனச்சரகர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாளில் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஒரு சில மணி நேரம் நடந்த மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதனிடையே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்ததில் காட்டுப் பகுதியில் கரடி பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து நேற்றிரவு ஏழு மணியளவில் நெல்லை ராமையன்பட்டி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் கரடி மறைந்திருந்த பகுதியின் 15 அடி தொலைவிலிருந்து 3 முறை மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்தனர். பின்னர், களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில், வனத்திற்குள் விடப்பட்ட கரடி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரடி கடித்த மூவரின் முகம், கண் உள்ளிட்டப் பகுதிகள் சிதைந்து போயின. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிளாஸ்டிக் முக மாற்றுச் சிகிச்சைக்கு டீன் ரவிச்சந்திரன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மூவருக்கும் இன்று பிளாஸ்டிக் முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.