Telangana State Governor Tamilisai Soundararajan : மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மையாரின் நலன் விசாரித்த தமிழிசை சௌந்தராஜன்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாரும், மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் துணைவியாருமான தயாளு அம்மையாரை (Dayalu Ammaiyar), தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச் சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர‌ராஜன் வெள்ளிக்கிழமை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர‌ராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கூடுதல் பொறுப்பாக‌ புதுச் சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியிலும் அவரை மத்திய அரசு நியமித்தது. அவர் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்தப்போது, அவர் தொடர்ந்து திமுகவை தொடர்ந்து தாக்கி பேசி வந்தார். அவரை திமுகவினரும் தொடர்ந்து தாக்கி பேசியும், கருத்தும் தெரிவித்து வந்தன‌ர். இந்த நிலையில் அவர் அரசியல் வேறுபாடுகளை கடந்து உடல் நலம் குன்றியுள்ள தயாளு அம்மையாரை பார்த்து நலம் விசாரித்துள்ளது அரசியல் நாகரீகத்தை (Political civilization) காண்பித்துள்ளது.

தமிழகத்தில் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உருவாகிய போது, இரு கட்சியினரும் தங்களை எதிரிகளைப் போலவே பாவித்துக் கொள்வார்கள். ஆனால் அந்த நடைமுறையை முதன்முறையாக தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் உடைத்தெறிந்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை( Jayalalitha) சந்தித்து பேசினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி (O. Panneer Selvam, Edappadi Palaniswami) ஆகியோர் தமிழகத்தில் முதல்வ‌ரான பிறகு இந்த இறுக்கும் சற்று தளர்ந்து, துக்க நிகழ்ச்சிகளின் போது ஒருவர் இல்லத்திற்கு ஒருவர் சென்று துக்கம் விசாரிப்பதனை தொடக்கி வைத்தனர்.

தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவை விட பாஜகவும், திமுகவும் (BJP and DMK) அரசியல் ரீதியாக பல்வேறு முறை மோதிக் கொள்வதிலும், கருத்துகளை தெரிவிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் தமிழிசை சௌந்தர‌ராஜன், தயாளு அம்மையாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளது பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது. என்றாலும் அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் நடந்ததால்தான் அரசியலைக் கடந்து, தமிழர்களின் நற்பண்புகளை காணமுடியும். இதனை தமிழிசை சௌந்தராஜன் மட்டுமின்றி, மற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தர‌ராஜன், மெத்தப் படித்த மருத்துவர் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி ஆனந்தனின் மகள் (Daughter of Kumari Anandan) ஆவார். அவரது சித்தப்பா வசந்த் அண்ட் கோவின் உரிமையாளர் மறைந்த வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டு தூத்துகுடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, திமுகவைச் சேர்ந்த, மு.க.ஸ்டாலின் சகோதரி கனிமொழியிடம், தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி அடைந்தார்.