Tenkasi Freedom Fighters Photo Exhibition: தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

தென்காசி: Tenkasi Freedom Fighters Photo Exhibition. தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை தென்காசி மாவட்டம் இ. சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாளாகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், கூடுதல் தலைமை இயக்குநர், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் தலைமை இயக்குநர் .மா.அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகம் மண்டலக இயக்குநர் ஜெ.காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சியை திறந்துவைத்தனர். இந்த கண்காட்சி இன்று முதல் 19,20, 22 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகின்றது.

இயக்குநர் காமராஜ் பேசும்போது, புகைப்படக் கருவிகள் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் பல சுதந்திர போராட்ட தியாகிகளை நாம் அறிய முடியவில்லை என்றும் மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் காலத்தை நம் கண் முன்னே நிறுத்தி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகங்களை போற்றுவதாக பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, நமது நாடு பல்வேறு வகையில் சிறப்பான முன்னேற்றத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு அடிதளமாக இருந்தவர்கள் யார் என்பதை நினைத்து பார்த்து, நமது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தி வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.

மாணவர்கள் நமது பாடபுத்தகத்தில் படிக்கும் போது தேசிய,மாநில அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தான் படித்து இருப்போம். அதையும் தாண்டி ஒவ்வொரு பகுதிகளிலும் சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர். அவர்களை பற்றிய குறிப்புகள் வரலாற்று பாடங்களில் இருந்து இருக்காது. சமூகத்திற்கு ஆணி வேராக இருந்த சுதந்திர வீரர்கள்,தலைவர்களை பற்றி இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கான தான் மத்திய மக்கள் தொடர்பகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி அறிந்துக்கொள்ளும் போது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பேசினார்.

இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தென்காசி மாவட்டத்தில் உள்ள சுதந்தர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், பூலித்தேவர், உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர் வசந்தி, மற்றும் கள விளம்பர அலுவலர் மத்திய மக்கள் தொடர்பகம் ஜூனி ஜேக்கப், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான, ஓவியம், பேச்சுப்போட்டி கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது இவ்விழாவில் திரளான மாணவ மாணவிகள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு வியந்தனர்.