Tamilnadu Rains: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் கனமழை

சென்னை: According to Meteorological Department, there is a possibility of heavy rain in 8 districts of Tamil Nadu on the 1st. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வரும் 1ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (28.01.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (29.01.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 30.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 01.02.2023 அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

இதன் காரணமாக, 29.01.2023 மற்றும் 30.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை / பெய்யக்கூடும்.

31.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

01.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

29.01.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.01.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31.01.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.02.2023 மற்றும் 02.02.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.