Summit for MSME procurement in Chennai: சென்னையில் நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்முதல் உச்சி மாநாடு

சென்னை: Summit for MSME procurement through Government e-Market to be held in Chennai on August 26th: அரசு இ-சந்தை மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்முதல் உச்சி மாநாடு நாளை (ஆகஸ்ட் 26ம் தேதி) சென்னையில் நடைபெற உள்ளது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டல பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, சென்னை ஓட்டல் கிரவுன் பிளாசாவில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முக்கிய உரை நிகழ்த்துவார்.

அரசு இ-சந்தை இணையப்பக்கத்தின் தலைமை நிர்வாகி திரு.பி.கே.சிங் சிறப்புரையாற்றுவார். இதை தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெறும். அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் போன்றவற்றின் கொள்முதல் தேவை என்ன என்பதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தொழில்களை வடிவமைக்கவும் இந்த மாநாடு உதவும்.

எம்எஸ்எம்இ தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்கின்ற அரசுத் துறைகள், தொழில்துறை நிறுவனங்கள், தனியார் துறையினர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். மேலும் பிரிட்டனின் துணை தூதரகம், தென் ரயில்வே, கனரக வாகனங்கள் தொழிற்சாலை (ஆவடி), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், லார்சன் & டப்ரோ, பிரேக்ஸ் இந்தியா போன்றவற்றின் மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இருந்து 4,06,961 விற்பனையாளர்கள் அரசு இ-சந்தையில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இ-சந்தை தொடங்கப்பட்ட 09.08.2016-க்குப் பின் இந்த இணையப்பக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் நிறுவனங்கள் ரூ.1090 கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர்.

அதே போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த விற்பனையாளர்கள் அரசு இ-சந்தை மூலம் ரூ.7185 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ-க்களின் பங்கு ரூ.3493 கோடி மதிப்புள்ளன.