Subsidy financing for food processing microenterprises: உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடனுடன் கூடிய மானிய நிதியுதவி

சென்னை: Subsidy financing with bank credit for food processing microenterprises. உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடனுடன் கூடிய மானிய நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பதப்படுத்தும் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில மற்றும் ஒன்றிய அரசும் இணைந்து “பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம்” என்கிற வங்கிக்கடனுடன் கூடிய மானிய நிதியுதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020-2021-ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் “ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டமானது, மாநில மற்றும் ஒன்றிய அரசும் இணைந்து தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் வங்கிக்கடனுடன் கூடிய மானிய நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியுதவித் திட்டத்தின் (AIF) கீழ் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) அல்லது வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம்.