Subsidized electric motor, solar pump sets: விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார், சூரிய பம்ப் செட்டுகள்

தர்மபுரி: Subsidized electric motor, solar pump sets for farmers: தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் மற்றும் சூரிய பம்ப் செட்டுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், வருமானத்தினை அதிகரிக்கும் பொருட்டு, பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்துறையில் அறுவடைக்குப் பின் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான, மாவரைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, கேழ்வரகு சுத்தப்படுத்தி கல்நீக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரைக்கும் இயந்திரம் நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம், மற்றும் தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் வாங்குவதற்கு 40% மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட உச்சவரம்புத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 7 இயந்திரங்களுக்கு ரூ.3.50/- லட்சத்திற்கான மானியம் தயார்நிலையில் உள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்பட உள்ளது.

மானியத்தில் மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம்:

நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் நிலத்தடிநீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்ப் செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிப்பதால் பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மின்மோட்டார் பம்ப் செட்டுகள் 50% மானியத்தில் அல்லது ரூ.10,000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக 10 குதிரைத் திறன் வரை உள்ள மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்கிட மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு விவசாயிகளுக்கான சான்று, (அதிகபட்சமாக மூன்று ஏக்கர் வரை மட்டும் இருக்க வேண்டும்) பாஸ் போர்ட் அளவிலான புகைப்படம், விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் சூரிய பம்ப் செட்டுகள் திட்டம்:

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மூலம் மின் இணைப்பின்றி பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கான தடையில்லா மின்சாரத்தினை பெற இத்திட்டம் பெரிதும் பயன்படுகிறது.

மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகள், மின் இணைப்பு இல்லாத வசதிக்காக சமுதாய கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள், புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட (தீர்த்த மலை மற்றும் சுஞ்சல் நத்தம் பிர்கா) பகுதிகளில் (Safe Firka ) இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜீன் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் பம்ப் செட்டுகள் அமைத்துக்கொள்ளலாம். இதில் 70% மானியமும், 30% விவசாயிகளின் பங்களிப்பாகும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், பாஸ் போர்ட் அளவிலான புகைப்படம், விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை குழுக்களாக இருப்பின் அதன் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் தலைமைப் பொறியாளர் (வே.பொ) சென்னை அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட மின் மோட்டார்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் 2021-2022 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேளாண் பொறியியல் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் மற்றும் விண்ணப்பிக்க WWW.agrimachinery.nic.in இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலமாம் மேலும் செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட ஆட்சியர் வளாகம் தருமபுரி, 04342296948, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம் தருமபுரி, 04342 296132, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர், தருமபுரி மாவட்டம், 04346296077, ஆகிய அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.