Strict action if sugarcane is sold in the open market: கரும்பை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை

தர்மபுரி: Strict action if sugarcane is sold in the open market. தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ள கரும்பை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலூகாவில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023-ஆம் ஆண்டு அரவைபருவத்திற்கு பதிவு செய்யப்பட்ட பதிவு கரும்பை ஆலை விதிகளுக்கு புறம்பாக எடுத்துச்செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன.

இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் அங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆலை பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெறவேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்வவேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்
தருமபுரி வேளாண்மை பொறியியல் துறை மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரச்கூடிய, வேளாண் இயந்திரங்களான 2 மண் தள்ளும் இயந்திரங்கள் 7 டிராக்டர்கள், 2 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஆகியவை வாடகைக்கு தயராக உள்ளது. மேலும் மண் தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்தல், டிராக்டர் மூலம் உழவு பணி (5 கொழுகலப்பை , சட்டி கலப்பை, ஒன்பது கொழுகலப்பை , சுழற்கலப்பை) கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்தல் சோளத்தட்டை அறுவடை செய்யும் கருவி உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய மேற்காணும் கருவிகள் வேளாண் பொறியியல் துறையில் வாடகைக்கு உள்ளன.

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும், டிராக்டருடன் மணிக்கு ரூ.500/- ம் மண்தள்ளும் இயந்திரம் மூலம் நிலம்சமன் செய்ய மணிக்கு ரூ1230/- ம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.890/- ம் மற்றும் தேங்காய் பறிக்கும் கருவி மணிக்கு ரூ.450/- ம் என்ற திருந்திய வாடகைக்கு 19.09.2022 முதல் வழங்கப்படுகின்றன.

வேளாண் பொறியியல் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் மற்றும் விண்ணப்பிக்க உழவன் செயலியில் e-வாடகை மூலம் பதிவு செய்து, 1. செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி, 04342296948, 2. உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி , 04342 296132, 3. உதவி செயற்பொறியாளர்(வே.பொ) ,வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி மாவட்டம், 04346296077 உள்ளிட்ட அலுவலகங்களை அணுகி பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.