State Awards for Persons with Disabilities: மாற்றுத்திறனாளிகளின் சிறந்த சேவையாக்கான மாநில விருதுகள் வழங்கல்

சென்னை: Presentation of State Awards for Outstanding Service to Persons with Disabilities. மாற்றுத்திறனாளிகளின் சிறந்த சேவையாக்கான மாநில விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கி, அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500/- பராமரிப்புத் தொகை, மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதி, திருமண உதவித்தொகை, வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக, இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக விருதுகள்வழங்கப்பட்டது. விருது பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை தொடங்கி வைக்கும் விதமாக, முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி, புகழ்பெற்ற கணினி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ஒரு வழிகாட்டியை (Mentor) அமர்த்தி, இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்க்காம் (NASSCOM) மூலம் மென் பொருள் திறன் பயிற்சியை வழங்கி வேலைவாய்ப்பினை பெற்று தருகிறது.

முன்னதாக, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். மேலும், ஊதா அங்காடி மற்றும் நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியினை முதல்வர் திறந்துவைத்து பார்வையிட்டார்.