Sri lanka crisis: கொழும்பில் ஊரடங்கு அமல்

கொழும்பில் ஊரடங்கு அமல்
கொழும்பில் ஊரடங்கு அமல்

Sri lanka crisis: இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.

போராட்டத் திடலில் ஒரு கூடாரம் தீவைப்பில் எரிவதைப் பார்க்க முடிந்தது.

போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.

இலங்கை பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது, அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்த நிலையில், எதையும் இறக்குமதி செய்ய முடியவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு மையப் பகுதியில் உள்ள காலிமுகத் திடலில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றாகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டம் இன்று ஒரு மாதத்தை நிறைவு செய்யும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கான அழுத்தம் அவரது கட்சிக்கு உள்ளேயும் அதிகரித்து வருவதாக செய்திகள் வரத் தொடங்கியிருந்தன.

இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, தாம் பதவி விலக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மே 9-ம் தேதி காலை பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பு கூடிய அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்களை தாக்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தவர்களில் பலர், அலரிமாளிகைக்குள் உருட்டு கட்டைகளுடன் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

பிறகு அவர்கள் அங்கிருந்து போராட்டம் நடந்துகொண்டிருக்கும் காலிமுகத் திடல் பகுதிக்கு சென்று கம்புகளால் போராட்டக் காரர்களைத் தாக்கத் தொடங்கினர். போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து உடைத்து, தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து சிறிது நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த தகவல் வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விசுவாசம்: மயிலாப்பூர் தொழிலதிபர் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிய செல்ல நாய்…!