TN School Reopen: 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

tn school reopen
1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

TN School Reopen: கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது.

கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காலை வணக்கக்கூட்டம்

அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அதற்கு நேரம் ஒதுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று வார விடுமுறையின் இறுதி நாளில் குழந்தைகளுக்கு, பெற்றோர் புத்தகப்பை, சீருடை, காலணி, எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்க தீவிரம் காட்டினர்.

இதனால் முக்கிய கடைவீதிகளில் நேற்று கூட்டம் காணப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு புத்தகப்பை உள்பட அனைத்து பொருட்களின் விலையும் சற்று அதிகரித்து இருப்பதாகவே கூறப்படுகிறது. புத்துணர்ச்சி வகுப்புகள் பள்ளிகள் தொடங்கிய முதல் ஒரு வாரத்துக்கு பாடத்திட்டங்களை நடத்தாமல், புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கேற்றபடி ஆசிரியர்களும் தயாராகி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி நடந்து வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதுதான் தொடங்கி இருக்கிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் கூட மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிகள் திட்டமிட்டு இருக்கின்றன.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணியை நடத்த கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதில் அரசு பள்ளிகளில் படிக்கும்போது மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறும் விதமாக துண்டு பிரசுரம், விளம்பர பதாகைகள் இடம்பெறவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விழிப்புணர்வு ஊர்வலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான பணிகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கின்றன. இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதனை மாணவ-மாணவிகளுக்கு வழங்க பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு உள்ளன. கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட இருக்கின்றன.

பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அவர்கள் முககவசம் அணிந்து வருவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ந்தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்க உள்ளது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்