Salem Book Festival: சேலம் புத்தகத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சேலம்: Sale at Salem Book Festival for Rs.1.50 Crores. சேலம் புத்தகத்திருவிழாவில் சுமார் ரூ.1.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெரும் சேலம் புத்தகத் திருவிழா சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத்திருவிழாவை கடந்த 20ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

இம்மாபெரும் புத்தகத் திருவிழா 20.11.2022 அன்று தொடங்கப்பட்டு 30.11.2022 அன்று வரை தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஒன்பதாம் நாளான இன்று (28.11.2022) காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் SPELL BEE போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு கலைமாமணி டாக்டர்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கும் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைக்கொண்டு, தினசரி பல்வேறு கருத்துரைகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் முதன்மை விருந்தினர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் இரா. ஜெகநாதன் அவர்களின் “காலநிலை மாற்றம்” என்ற தலைப்பிலான கருத்துரை நிகழ்ச்சி மற்றும் கவிஞர் ஆத்தூர் சுந்தரம் அவர்களின் “தட்டி எழுப்பும் தாலாட்டுகள்” என்ற தலைப்பிலான கருத்துரை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், கவிஞர் பெ.பெரியார் மன்னன் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளார்.

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடையே வாசிப்புத் திறனை உருவாக்கி, அறிவினை மேம்படுத்தும் விதமாக 30.11.2022 வரை சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.