சேலம்: 3 lakh people have visited the Salem Book Festival till yesterday. சேலம் புத்தகத் திருவிழாவிற்கு நேற்று வரை 3 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெரும் சேலம் புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் கடந்த 20ம் தேதி தொடங்கிய இம்மாபெரும் புத்தகத் திருவிழா 20.11.2022 அன்று தொடங்கப்பட்டு 30.11.2022 அன்று வரை தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புத்தகத் திருவிழா வருகின்ற 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் ரூ.2.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.200 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடையே வாசிப்புத் திறனை உருவாக்கி, அறிவினை மேம்படுத்தும் விதமாக சேலம் மாவட்டத்தில் வருகின்ற 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.



