Rs.24,000 each for 84 beneficiaries to be resettled: சென்னையில் மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 கருணைத்தொகை

சென்னை: Rs.24,000 each for 84 beneficiaries to be resettled: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம் மொத்தம் 20.16 லட்சம் ரூபாய்கான காசோலைகளையும், தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 1974 – 75 ஆம் ஆண்டு 280 சதுர அடியில் கட்டப்பட்ட 84 அடுக்குமாடி குடியிருப்புகள் தற்பொழுது பழுதடைந்த நிலையில் உள்ளது. வாரியத்தின் கட்டட வல்லுனர் குழு ஆய்வு செய்து பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மறு குடியமர்வு செய்யவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை ரூ.8000- த்திலிருந்து ரூ.24000- ஆக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் மறு குடியமர்வு செய்யவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24000 வீதம் மொத்தம் ரூ.20.16 லட்சத்திற்கான காசோலைகளையும், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் குடியிருப்புதார்களுக்கு வழங்கினார்.

இத்திட்டப்பகுதியில் உள்ள பழுதடைந்த 84 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 400 சதுர அடியில், தூண்தளம் மற்றும் 9 அடுக்குமாடிகளுடன் 162 குடியிருப்புகள் ரூ.24.30 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இதில் ரூ.7 இலட்சம் மாநில அரசு மான்யமாகவும், ரூ.6.09 இலட்சம் மாநில அரசின் உட்கட்டமைப்பு நிதியாகவும், ரூ.1.50 இலட்சம் ஒன்றிய அரசு மான்யமாகவும் வழங்கும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.250 அல்லது ஒரே தவணையாக ரூ.41,000 செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன், 400 சதுர அடியில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 300 லிட்டர் கொள்ளளவு கான்கீரிட் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். மேலும், 2 மின் தூக்கிகள் (Lift), மின் ஆக்கிகள் (Generator), தெரு விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.