Perarivalan release: பேரறிவாளன் விடுதலையால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

perarivalan-case
சென்னையில் பேரறிவாளன் -வைகோ சந்திப்பு

Perarivalan release: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, தமிழகம் முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பகுதியில் வாயில் வெள்ளை துணி கட்டி இன்று போராட்டம் நடத்தினர்.

அதன்படி, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையகமான அருணாச்சலம்மன்றம் முன்பு, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில், காங்கிரசார் வாயில் துணியை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர், முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்டப் பொருளாளர் பஷீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளுநர் மீதான தவறினால், உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுவித்துள்ளது. அவர் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும் தர்மத்தின் படி தவறு.

ஏற்கனவே, பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர். அப்படி இருக்கையில், கருணை அடிப்படையில் விடுவிப்பு என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு பேர்களின் விடுதலையை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

அதைவிட, பேரறிவாளன் விடுதலையை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் விடுதலையை போல வெடி வெடித்து கொண்டாடுவது ஏற்புடையதல்ல. இதை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

திமுக-காங்கிரஸ் இடையே விரிசலா?

பாஜகவுடன் திமுக கூட்டணி என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல், காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இணக்கமாக இருக்கிறார். கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவிப்பதே அதிகாரபூர்வமானது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை வைத்து திமுக-காங்கிரஸ் இடையே யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. இது வேறு. கூட்டணி என்பது வேறு” என்றார்.

சமாதானம் செய்த திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, மாவட்டத் துணைத்தலைவர் சிக்கல் சண்முகம் என்பவர், “கொலைக்காரனை வெளியே விட்டதற்கு கொண்டாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ்காரன் வயிறு எரியுது” என்று தொடர்ந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தார்.

இதையும் படிங்க: Actor yogibabu: பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு