Police protection: சேலம் மாநகர் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு

சேலம்: Tight security has been put in place throughout Salem city. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகர் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி தலைமையில், சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல்துறை கூறியதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்து, மூன்று பிரிவுகளாக, இன்ஸ்பெக்டர் தலைமையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு நேரங்களில், 18 வயதுள்ள சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய உள்ளனர்.

மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால், அந்த வாகனங்களின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 18 வயது முடிவடையாத தங்கள் மகன்களுக்கு எக்காரணம் கொண்டும், மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. செல்போன்கள் மூலம் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதால், தங்களது குழந்தைகளை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டுகள், புத்தகங்கள் படிப்பது உள்ளிட்ட பயனுள்ள செயல்களில் குழந்தைகள் ஈடுபட பெற்றோர் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.