Pen monument ban case: பேனா நினைவுச்சின்னம்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதிக்கு 42 மீட்டர் உயரத்திற்கு (Pen monument ban case) பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் உடல்கள் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு சார்பாக மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதே போன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு தி.மு.க., வந்த பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மணி மண்டபம் மற்றும் மிப்பெரிய அளவில் பேனா சின்னம் வைப்பதற்கு அரசு சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளை பாதுகாக்கப்பட்ட கட்லோர பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் கடல் அலைகள் மேலெழும்பும் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கட்டுமானங்களால் 88 ஆமைகள் உயிரிழந்துள்ள நிலையில், இப்பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்பதால், மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு சுமார் 42 மீட்டர் உயர பேனாவுடன் கூடிய நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். வரும் காலங்களில் யாருடைய உடலும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு விசாரணை நடத்தியது. மனுவுக்கு 8 வாரங்களில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்தது. இந்த வழக்கால் கருணாநிதியின் மணிமண்டபம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திகளை படிக்க:Opposition to Shah Rukh Khan’s film: இந்து மதத்தை புண்படுத்தும் ஷாருக்கான் படத்திற்கு எதிர்பு

முந்தைய செய்திகளை படிக்க:Foxes Sparrows In Tribal List: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குரவர், குருவிக்காரர் சமுதாயம்: மக்களவையில் நிறைவேறிய மசோதா