Online gambling: ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல்: அன்புமணி

சென்னை: Anbumani Ramadoss has said that the Governor should give his approval to the Anti-Online Gambling Act today. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானி ஓட்டுனரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தடுக்க முடியாததாகி விடும்.

வாழ்க்கையில் முன்னேறும் நோக்கத்துடன் மகளிர் குழுவில் மனைவி கடனாக பெற்று வந்த ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி பார்த்திபன் இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இல்லை.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தை அழிக்கிறது. அதைத் தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றே ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.