Kallakurichi Riots: தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அதிரடி

சென்னை: Notice to private schools: தமிழகத்தில் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார். ஆனால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நீதி விசாரணை கோரி இளைஞர்கள் திரண்டு (Kallakurichi Riots) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் (Police Vehicles) அடித்து நொறுக்கப்பட்டன. இது மிகப் பெரிய கலவரமாக மாறி, பள்ளி வளாகத்தில் உள்ள பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

இதனையடுத்து, உடனடியாக தடியடி நடத்தி கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு (DGP Sylendra Babu) மற்றும் உள்துறை செயலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சின்ன சேலம், நைனார்பாளையம், உளுந்தூர் பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மொத்தமாக 302 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 61 பேர் கடலூர் சிறையிலும், 219 பேர் திருச்சி சிறையிலும் 21 பேர் செஞ்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் இயங்காது (School Holiday) என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.

இந்நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் (Directorate of Matriculation Schools) தெரிவித்துள்ளது.