Nilgiris tahr plan: நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழக அரசு ஆணை

சென்னை: Tamil Nadu government order to set up the Nilgiris tahr plan. தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழக அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் ஐம்பெருங்காப்பியங்களில் இரு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன.

வரையாடு வருடையும் மடமான் மறியும் (சிலம்பு.வஞ்சி.காட்சிக்காதை :51)

ஓங்கு மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்துகு பெருந்தேன் (சீவக.1559:1)

மேலும் பதினெண்கீழ்க்கணக்கு, திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றால குறவஞ்சியில் “குறத்தி மலை வளம் கூறல்” பாடலிலும் வரையாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

நீலகிரி வரையாடு திட்டம் பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாட்டினை அறிமுகம் செய்தல், நோய் கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், சோலை புல்வெளிகளை சீரமைத்தல், களப்பணியாளர்களுக்கு தளவாடங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 -ம் தேதியை “வரையாடு தினம்” என அனுசரித்தல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி வரையாடு இனம் IUCN-னால், அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டு, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-60 முதல் அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை (WWF) 2015-ன் படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதி முக்கியமான பல்லுயிர் மண்டலம் என அங்கிகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாக கொண்டுள்ளன.

மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு ஆளாகுதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, பிற மானுடவியல் அழுத்தங்கள், சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்பு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில சிதறிய வாழ்விட பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த நீலகிரி வரையாடு திட்டத்தின் மூலம் இவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவற்றிற்கு உரிய வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு அவை வாழ ஏதுவான சூழல் உருவாக்கி அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.