National deworming camp today: நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்

நாமக்கல்: National deworming camp today in Namakkal district. நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் இன்று (09.09.2022) 1-19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. 16.09.2022 அன்று விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1/2 மாத்திரை (200 mg) 2 முதல் 19 வயதினருக்கும், 20-30 வயதுள்ள பெண்களுக்கும் 1 மாத்திரை (400 mg) வழங்கப்படும். இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5.18,438 குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரையுள்ள 1,22,433 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் மூலமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக இரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும்.

மேலும், குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்வதினால் உடல் நலம் மேம்படுவதுடன் மாணவர்களின் பள்ளி வருகை அதிகரிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம். மேலும், முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன் கள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளிகள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று மாத்திரையை பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.