Multi Level Car Parking: சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் நாளை திறப்பு

சென்னை: Multi Level car parking at Chennai airport to open tomorrow. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் முன்னிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாளை திறந்து வைக்கிறார்.

6 அடுக்குகள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதி 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் இரண்டாயிரத்து 150 கார்களை நிறுத்த முடியும். இருசக்கர வாகனங்களுக்கு தனி இடம் உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் வளாகத்தில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்கள், உணவு விடுதிகள் சில்லரை வணிகக் கடைகள், சிறுவர்கள் விளையாடும் இடங்கள் உள்பட பல்வேறு வணிக வசதிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை பிற்பகல் 2.00 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் 4-வது முனைய பகுதியில் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, என்விஎன் சோமு, சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.