Money recovery in online fraud: ஆன்லைனில் ரூ.1.51 லட்சம் ’அபேஸ்’; உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை

நாமக்கல்: Money recovery in online fraud: நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பறிகொடுத்த பணத்தை போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

நாட்டின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பணப்பறிமாற்றம் உள்ளிட்ட வங்கிகள், மத்திய- மாநில அரசு சேவைகள் மற்றும் ஆவணங்கள் என ஆன்லைன் சேவைகள் வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் உலகத்தை நோக்கி பயணிக்கும் மக்கள் சில தவிர்க்க முடியாத குற்றங்களுக்கும் சிக்கி தவித்து வருகின்றனர்.

அதன்படி, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது சில தொழில்நுட்பக் காரணங்களால் பணம் வெளியே வராமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் பணத்தை பெற சில நாட்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சூழ்நிலைகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும் ஆன்லைன் பணப்பறிமாற்றத்திலும் இண்ர்நெட் பிரச்னை உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நிலை நீடித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் செல்போன் மற்றும் இமெயில் மூலம் குறுந்தகவல்கள் வரப்பெற்று வாடிக்கையாளர்களிடம் பரிசு விழுந்துள்ளதாக ஆசை காட்டி அவர்களின் விபரங்களை பெற்று, வங்கிக்கணக்கில் பணத்தை ஆன்லைன் மோசடியில் கொள்ளையடிப்பது உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் மோசடியில் பறிகொடுத்த பணத்தை நாமக்கல் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்ற பலர் பணத்தை இழக்கின்றனர். இது சம்மந்மதாக மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு புகார்கள் வந்தன. அதில், சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் லிங்க்கை கிளிக் செய்து வங்கி விபரங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 74 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தி, ரூ.74 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது. நாமக்கல் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு, குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி வந்த மொபைல் போன் அழைப்பை நம்பி, விபரங்களை கொடுத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து, ரூ.40 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி, தனது வங்கி கணக்கில் உள்ள இருப்பை சரி பார்ப்பதற்கு தவறுதலாக, தனது மொபைல் போனுக்கு வந்த ஓடிபி நம்பரை தெரிவித்ததில், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.37 ஆயிரத்து 447 எடுக்கப்பட்டது. விசாரணை முடிவில், பணம் மீட்கப்பட்டது.

நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 3 நபர்களின் மொத்தப் பணம் ரூ. 1.51 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி ஒப்படைத்தார்.