Mondus storm warning: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையையொட்டி சேலம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சேலம்: Precautionary measures in Salem district due to Mondus storm warning of heavy rain. மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீ ஹரிக்கோட்டவிற்கு இடையே 09.12.2022 நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று 08.12.2022 முதல் 11.12.2022 முடிய 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவுரைகளுக்கிணங்க, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண்மை மின்சாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, பொறியியல் துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எவ்வித விடுப்பும் முறையாக அனுமதி இன்றி துய்க்காமல் தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையின்போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் விழ நேர்ந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள், ஜெ.சி.பி இயந்திரம் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தலைமை இடத்திற்கு அறிக்கை அனுப்பிடவும், உபரி நீரை வெளியேற்ற நேர்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்குதடையின்றி குடிநீர், பால், மருந்து இருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க மின்சார வாரியத்தின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவைக்கேற்ப காவல்துறை மூலமாக போக்குவரத்தைச் சீரமைக்கப் போதுமான காவலர்களை ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசரகாலத் தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 04272450498, 2452202 மற்றும் 91541 55297 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மழை நேரங்களில் அவசியப் பணிகளின்றி மற்ற நேரங்களில் வெளியில் செல்வதையும், பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்திடவும், அதிக குளிர் இருக்கும் எனக் கருதப்படுவதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும், குழந்தைகளையும் அவரவர் வீடுகளிலேயே பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். மழைக் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் நடைமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.