Modern Automatic Bus Stop Notification Launches: பேருந்துகளில் நவீன தானியங்கி அறிவிப்பு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னை: Udayanidhi Stalin Launches Modern Automatic Bus Stop Notification Scheme. நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் அறிவிப்பு திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் அறிவிப்பு திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக “புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு” திட்டத்தை காலை 11.00 மணியளவில் துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு எவ்வித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.