Meeting on North East Monsoon Precautionary Action: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டம்

சேலம்: Study Meeting on North East Monsoon Precautionary Action. சேலத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தலைமையில் இன்று (30.09.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்தகால நிகழ்வுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் போதிய அளவில் நோய்தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளோரினேசன் செய்திட வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் நீர் இருப்பு விவரம் குறித்த தினசரி அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மாநகராட்சியின் சார்பில் அனைத்து பகுதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும். மாநகராட்சி சாலைகளில் பழுது இருப்பின் அதனை நிவர்த்தி செய்திட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையினை கண்டறிந்து உடனடி அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். சிறு பழுதுகள் இருப்பின் உடனடி நிவர்த்தி செய்திட வேண்டும். மீன்வளத்துறையின் சார்பில் படகுகள் மற்றும் அதனை இயக்குபவர்கள் குறித்த விவரம் மற்றும் மீனவர்களின் விவரத்தினை மாவட்ட நிர்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையின் சார்பில் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரத் துறையினர் மின் பாதைகளை முறையாக பராமரிப்பதுடன் 24 மணி நேரமும் முழுக் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் இணைப்புகளில் மழைநீர் கலந்திடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் உறுதித்தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் நீர் இருப்பு விவரம் குறித்த அறிக்கையினை அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் 1077” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.121-இல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை ) புருசோத்தமன், அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.