Kubera Grivalam on 22nd at Tiruvannamalai: திருவண்ணாமலையில் 22ம் தேதி குபேர கிரிவலம்

திருவண்ணாமலை: Kubera Grivalam on 22nd at Tiruvannamalai. திருவண்ணாமலையில் 22ம் தேதி குபேர கிரிவலம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை மலையை லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டுமல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என பக்தர்கள் வலம் வருகின்றனர். தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வருகிறார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் திடீரென குபேர கிரிவலம் என்பது பிரபலமாகி வருகிறது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் என்கிற பெயரில் 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கமென பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஆனால் குபேர லிங்கத்தை மட்டும் அனைவரும் வணங்குவார்கள். அதற்கு காரணம், குபேர லிங்கத்தை வணங்கினால் வீட்டில், தொழிலில் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையே காரணம். அதனால் எப்போதும் அந்த லிங்க கோயிலில் கூட்டமிருக்கும்.

ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 -வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி நவம்பர் 22ம் தேதி திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது.

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில், குபேர பெருமான் கிரிவலம் செல்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.அன்றைய நாளில் கிரிவலம் சென்றால், குபேர பெருமான் ஆசி கிடைத்து, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அன்று பக்தர்கள் கிரிவலப்பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவதாக உள்ள குபேர லிங்கத்திற்கு, மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை பிரதோஷ காலத்தில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபட்டு கிரிவலம் செல்வர்.அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலப்பாதை முழுவதும் தீபமேற்றியும், பெண்கள் வீடுகளுக்கு முன் தீபமேற்றியும் வழிபடுவர்.

கொரோனா தடைஉத்தரவு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குபேர கிரிவலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.