Kidnapping financier near Namakkal: நாமக்கல் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல்

நாமக்கல்: Kidnapping financier near Namakkal: நாமக்கல் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே பாதரை பகுதியில் வசித்து வருபவர் கவுதம். இவர் வெப்படை பகுதியில் 6 வருடங்களாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரை பகுதியில் இவரது வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே காருடன் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல் கவுதமை தாக்கி, மிளகாய் பொடியை சம்பவ இடத்தில் தூவி விட்டு காரில் கடத்தியதுடன், அவரது டூவீலரையும் கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் கவுதம் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் அவரது மனைவி திவ்யபாரதிக்கு கணவர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வெப்படை போலீசில் திவ்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து, கவுதம் குடும்பத்தாருடன் விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே நிதி நிறுவன அதிபர் கவுதம் அணிந்து இருந்த செருப்பு, ரத்தக்கறை, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட தடயங்கள் போலீசாரால் சேகரிக்கப்பட்டன. இவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கவுதம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியாக இருப்பதால், கட்சி நிர்வாகிகள் வீட்டின் முன்பும், வெப்படை போலீஸ் ஸ்டேஷன் முன்பும் திரண்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறா, அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நிதிநிறுவன அதிபரை கடத்தி சென்ற சம்பவத்தால் போலீசார் அதிகம் திரண்டிருப்பதால் இப்பகுதியே பரபரப்பாக உள்ளது.எதற்கு கடத்தப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.