Peace Rally in chennai: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி அமைதி பேரணி

சென்னை: Karunanidhi’s memorial day, a peace rally was held: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.ல்.ஏ.க்கள், திமுக தொண்டர்கள் சென்னையில் அமைதி பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஓமந்தூர் வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகில் இருந்து மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் கட்சியினர் இதில் கலந்து கொண்டு கருணாநிதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி, தயாநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தொடங்கிய பேரணி, அமைதியான முறையில் சென்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. பின்னர் அங்கு கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் மரியாதை செலுத்தினர். இதேபோல், மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பேரணி நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்றது. திமுக-வினர் அமைதி பேரணி நடத்தியதால், அண்ணா சாலை, வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தெரிந்துகொள்வோம்:
முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969-இல் முதன்முறையாகத் தமிழக முதல்வரானார். மே 13, 2006-இல் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித் தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.