Kanchipuram Book Festival: காஞ்சிபுரத்தில் வரும் 23ம் தேதி புத்தகத்திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம்: The upcoming 23rd Book Festival begins at Kanchipuram District Collectorate. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 23ம் தேதி புத்தகத்திருவிழா துவங்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் வரும் 23ஆம் தேதி துவங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை ‘புத்தியைத் தீட்டுவோம்’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழா 100 அரங்குகள் அமைக்கப்பட்டு பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. வரும் 23ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற உள்ள விழாவில், தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர்.

புத்தகத்திருவிழாவின் இரண்டாம் நாளில், தமிழை நேசிப்போம் என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளார். அன்று மாலை விஜய் டிவி சூப்பர் சிங்கர் வழங்கும் இசை திருவிழாவும் நடைபெற உள்ளது.

மூன்றாம் நாளில், நம்ம காஞ்சிபுரம் நம்ம பெருமை என்ற தலைப்பின் கீழ் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் மற்றும் அன்பிற் சிறந்த தவமில்லை என்ற தலைப்பில் சசிலயா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். ஸ்ரீபச்சையம்மன் கட்டைக் கூத்து மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

நான்காம் நாளில், ‘அ’ னா ‘ஆ’ வன்னா என்ற தலைப்பில் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் கருத்துரை வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அன்பிற்கு நிகர் அன்பே என்ற தலைப்பில் கவிதா ஜவஹர், எண்ணும் எழுத்தும் எனும் தலைப்பில் சிலம்புலி தாமல் சரவணன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.

ஐந்தாம் நாளில், மனித சக்தி என்ற தலைப்பில் விஜய் டிவி ஈரோடு மகேஷ் அவர்கள் கருத்துரை வழங்கவும், கலக்கப்போவது யாரு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

ஆறாம் நாளில், ஊக்கமது கைவிடல் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கருத்துரை வழங்க உள்ளார். தமிழுக்கு பெருமை சேர்ப்பது சங்க காலமா ? சமகாலமா ? எனும் தலைப்பில் முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

ஏழாம்நாளில், சிகரங்களை நோக்கி என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகிசிவம் , சிறகுகள் பறப்பதற்கானவை என்ற தலைப்பில் கவிஞர் சுகிர்தராணி மற்றும் சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் மோகன் சுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

எட்டாம் நாளில், உண்டு தீர்த்தோம் உழுது பார்ப்போம் என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா மற்றும் வட மாவட்டப் படைப்புகளில் உணவும் உழவும் என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிப்பித்தன் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டு துணையினர் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

ஒன்பதாம் நாளில், மனமே கவனம் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ். ரவி ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பத்தாம் நாளில், நவீன சமூகமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் டாக்டர் சிவராமன் கருத்துரை வழங்கவும் அமுத தமிழ் ஆடரங்கம் என்ற தலைப்பில் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் உரையும் , கூத்தும் நிகழ்த்த உள்ளனர்.

11ம் நாளில், சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கலைகளின் வளர்ச்சியே ! பொருளாதார வளர்ச்சியே ! என்ற தலைப்பில் கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இறுதி நாளன்று புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ள நன்கொடை அளித்த நன்கொடையாளர்களை சிறப்பித்தல் மற்றும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று சிறப்பாக பணியாற்ற துறை அலுவலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இது தவிர காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி கல்லூரி மாணவ மாணவிக்கான பல்வேறு போட்டிகள், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாலை நாலு மணி முதல் 5 வரை கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொறியியல் கல்லூரி மாணவ மாணவி கலை நிகழ்ச்சி நாட்டுப்புற கலை நிகழ்ச்சி என நடைபெற உள்ளது.