Jallikattu in Madurai Palamedu: மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாயும் காளைகள்

மதுரை: Madurai’s second jallikattu festival is taking place at Palamedu. மதுரையின் இரண்டாவது ஜல்லிக்கட்டு விழா பாலமேட்டில் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு திருவிழாவின் இரண்டாம் நாள் பொங்கலை முன்னிட்டு மதுரையின் இரண்டாவது ஜல்லிக்கட்டு விழா பாலமேட்டில் நடைபெற்று வருகிறது. பாலமேடு கிராம கோயிலை சார்ந்த மடத்து கமிட்டி சார்பில் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. பரந்து விரிந்த பாலமேடு ஆற்று மைதானத்தில் விளையாட்டு நடத்தப்படுவதால் மாடுகளும், வீரர்களும் இட நெருக்கம் இன்றி விளையாட முடியும். பாலமேடு மைதானத்தில் வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர் கேலரி உள்ளிட்டவை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளதால், அவை வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் 8 மணிக்கு போட்டி துவங்கியது. மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட காளையர்களும் உற்சாகமாக பங்கேற்கின்றனர். 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நடைபெறும் சுற்றுகளில், ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 வீரர்கள் களமாட உள்ளனர்.

சிறந்த மாடு பிடி வீரர், காளைக்கு கார், பைக் பரிசு வழங்கப்பட உள்ளன. காளைகளை சிறப்பாக அணையும் வீரர்கள், சிறப்பாக விளையாடும் காளைகளுக்கு தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், டிவி, வாஷிங் மெஷின், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. போட்டி முறைகேடுகளை தவிர்க்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என்பன உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

மாடுகள் உடலில் எண்ணெய், இரசாயன பவுடர் தடவப்பட்டுள்ளனவா, கண், மூக்கில் பொடி தூவப்பட்டு உள்ளனவா என்பன போன்ற பரிசோதனைகள் செய்த பின்னர் அனுமதிக்கப்படும். போட்டி முடிந்து வெளியே வரும் காளைகளின் உடல் பரிசோதனையும் இந்தாண்டு முதல் நடைபெறுகிறது. காளைகள் பரிசோதனை செய்யும் இடம் முதல் மாடுகள் வெளியேறும் பகுதி வரை 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மரக்கட்டைகள், இரும்பு தடுப்புகள் கொண்டு கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீரர்கள், மாடுகளுக்கு காயம் ஏற்படாத வகையில் வாடி வாசல் அருகே 100 மீட்டருக்கு தேங்காய் நார் படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவ மையத்தில் 10 மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 30 கால்நடை துறை குழுவினரும் தயார் நிலையில் உள்ளன காளைகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு போட்டிக்கான டோக்கன் இருந்தால் மட்டுமே சோதனை சாவடியில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு குறைந்தபட்ச பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக உயர் கோபுரங்கள், சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் 7 காளைகளை அடக்கி ராஜா முதலிடம். 6 காளைகளை அடக்கி அரவிந்த் இரண்டாமிடமும் 3 காளைகளை அடக்கி அஜித்குமார் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

காலை 9.30 மணி நிலவரப்படி 172 காளைகளுக்கு பரிசோதனை முடிந்து வாடிவாசலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 காளைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.