Apply for unemployment benefits: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: Invitation to apply for unemployment benefits: நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் (Namakkal District Collector) வெளியிட்டுள்ள அறிக்கையில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600 மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 01.07.2022 முதல் 30.09.2022 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை . மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ண ப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பத்தில் 7ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.