Introduction of new app ‘Smart Police’: காவலர்களை கண்காணிக்க ‘ஸ்மார்ட் காவலர்’ புதிய செயலி அறிமுகம்

சென்னை: Introduction of new app ‘Smart Police’ to monitor police officers. தமிழகத்தில் காவலர்களை கண்காணிக்க ‘ஸ்மார்ட் காவலர்’ புதிய செயலியை டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்தார்.

தமிழகத்தில் காவலர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை பதிவு செய்யவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர்கள் சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக காவல் துறையை நவீன மயமாக்க சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காவல் துறையினரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்துபராமரிக்கவும், தரவுகளை முறையாகவும் சிறப்பாகவும் கையாள ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு டிஜிபி தனது அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும் உதவுகிறது. மேலும் கள அலுவலர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ அதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இந்த செயலி இருக்கும். இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொது மக்களின் சேவைகளிலும் ஒரு மைல் கல்லாக அமையும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.