Fish price: சென்னை, காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

fish price
காசிமேட்டில் மீன்விலை 2 மடங்கு உயர்வு

Fish price: ஏப்ரல் மாதம் 15 ந் தேதி முதல் ஜூன் 14 ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரிய விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

குறைந்த அளவு தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகுகளில் மட்டுமே கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய ஏலம் விடும் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மீன்பிடி தடை காலம் என்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அசானிப்புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லாததால் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவு கூடுவார்கள். அதனால் இன்றே மீன்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என அசைவப் பிரியர்கள் காசிமேடுக்கு மீன்களை வாங்க வந்திருந்தனர்.

இதனையடுத்து மீன் வரத்து குறைவு காரணமாக மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் விலை இரு மடங்காக விற்பனை செய்யப்படுகிறது.

காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வகை வஞ்சிரம் 1,100 ரூபாய்க்கு விற்கப்பட்டவை 2500 வரை விற்கப்படுகிறது. சங்கரா 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய், நெத்திலி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 750 ரூபாய், வவ்வால் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1100 ரூபாய், கடம்பா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 900 ரூபாய், இறால் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 800 ரூபாய், பாறை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நண்டு 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை ரூ.750, கொடுவா 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 800 ரூபாய்க்கும், கிழங்கா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உயர்ந்துள்ளது என மீனவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Akshay Kumar Covid 19 Positive: நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா