
சென்னை: IIT Madras launches Centre for Indian Knowledge Systems: இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை தொடங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் தலைமை இயக்குநர் குமார் துஹின் ஆகியோர் இம்மையத்தை தொடங்கி வைத்தனர்.
மையத்தின் தொடக்கவிழா கடந்த 6ம் தேதி நடைபெற்றபோது, இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை, மொழியியல், கலைகள், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகிற்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதன் கண்டுபிடிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த மையத்தின் முதன்மை ஆய்வாளராக டாக்டர் ஆதித்ய கொலச்சனா செயல்பட்டு வருகிறார். பேராசிரியர்கள் அருண் மேனன், மனு சந்தானம், சந்தோஷ்குமார் சாஹு, சுதர்சன் பத்மநாபன், ராஜேஷ்குமார், ஜோதிர்மயா திரிபாதி ஆகிய ஐஐடி ஆசிரியர்கள் இம்மையத்தின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த மையத்திற்கான நிதியுதவியை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் அதன் இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவு வழங்கி வருகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐசிசிஆர் தலைமை இயக்குநர் திரு. குமார் துஹின், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க ஐஐடி மெட்ராஸ்-ன் இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
ஐசிசிஆர், ஐஐடி மெட்ராஸ் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமார் துஹின், பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஐஐடி மெட்ராஸ்-ன் டீன் (குளோபல் என்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி பேசும்போது, இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பாக தரமான ஆராய்ச்சியை இம்மையம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கும், இந்திய கல்விமைய வளாகங்களை சர்வதேச மயமாக்குவதற்கும் உகந்த சூழலை இம்மையம் உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பான தரமான ஆராய்ச்சியை இந்த மையம் வெளியிடுவதுடன், கல்விக் கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்தி கண்டுபிடிப்புகளைப் பரப்புவது இம்மையத்தின் குறிக்கோளாகும். வெளியில் உள்ள அறிஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் இணைத்து இந்த ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.
தொடக்கத்தில் கருப்பொருள் பகுதிகளை வடிவமைத்து, இதுதொடர்பான பாடப்பிரிவுகளை ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு இந்த மையம் வழங்கும். பின்னர், இப்பாடப்பிரிவுகளை என்பிடெல் தளத்தில் விரிவாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அறிவுசார் அமைப்புகளின் பல்வேறு அம்சங்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரபலப்படுத்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இம்மையம் திட்டமிட்டுள்ளது. பிரபலமான கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்றவை மூலமாகவும் மக்களைச் சென்றடைய இந்த மையம் திட்டமிட்டுள்ளது.