IIT Madras and NASA research: பாதுகாப்பான விண்வெளிப் பயணத்துக்கு நாசவுடன் ஐஐடி மெட்ராஸ் ஆய்வு

சென்னை: IIT Madras and NASA Jet Propulsion Laboratory researchers study microbial interactions taking place in the International Space Station to make space travel safer. ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஜெட் புரொபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடக்கக்கூடிய நுண்ணுயிரித் தொடர்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)மற்றும்நாசா ஜெட் புரொபல்சன் ஆய்வகம்ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நுண்ணுயிரிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து செய்திருக்கின்றனர். நுண்ணுயிரிகளால் விண்வெளி வீரர்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதன் தாக்கத்தைக் குறைக்க, விண்வெளி ஆய்வு நிலையங்களை கிருமிநீக்கம் செய்வதற்கான உத்திகளை வகுக்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும்.

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் பயணத்தின்போது நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் பூமியில் இருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் குறைந்த அளவிலேயே இருக்கும்.எனவே, விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதும், குறுகியகால மற்றும் நீண்டகால விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைப் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேற்பரப்பில் கிளெப்சியல்லா நிமோனியா (Klebsiella pnemoniae) பாக்டீரியாவின் ஆதிக்கம் இருப்பதாக முந்தைய கண்டுபிடிப்புகளில் தெரிய வந்ததால், அதனைப் பின்பற்றியே தற்போதைய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதே நோய்க்கிருமிதான் நிமோனியா உள்ளிட்ட மருத்துவமனையில் உருவாகும் இதர நோய்த்தொற்றுகளுக்கு (nosocomical infections) காரணம் என அறியப்படுகிறது. இந்த பாக்டீரியா தனக்கு நெருக்கமாக உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதைப் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பேரார்வம் கொண்டிருந்தனர்.

மூன்றுமுறை விண்வெளிப் பயணங்களின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 இடங்களில் எடுக்கப்பட்ட நுண்ணுயிர் மாதிரிகளின் தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி மையத்தில் காணப்படும் முக்கிய நுண்ணுயிரியான கிளெப்சியல்லா நிமோனியா, தனக்கு அருகிலிருக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு குறிப்பாக பாண்டோயாஜினஸ் (Pantoeagenus) பாக்டீரியாக்களுக்கும் நன்மை பயக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இருப்பினும், இந்த பாக்டீரியா இருப்பதால் அஸ்பெர்கிலஸ் (Aspergillus) பூஞ்சையின் வளர்ச்சி தடுக்கப்படுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பான கணக்கீடுகள் அனைத்தும் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கிளெப்சியல்லா நிமோனியா இருப்பது அஸ்பெர்கிலஸ் பூஞ்சையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

பூபத் அண்ட் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் இணைப் பேராசிரியரும், ஐஐடி மெட்ராஸ் ராபர்ட் பாஷ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையத்தின்(Robert Bosch Centre for Data Science and Artificial Intelligence-RBCDSAI) முக்கிய உறுப்பினருமான டாக்டர் கார்த்திக் ராமன் அவர்களும், ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் அவர்களும் இணைந்து பணியாற்றினர்.

இத்தகைய ஆய்விற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்த டாக்டர் கார்த்திக் ராமன், ஐஐடி மெட்ராஸ் கூறும்போது, “கட்டமைக்கப்பட்ட சூழலில் மனித உடல்நலனில் நுண்ணுயிர்கள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அவற்றுக்கு இடையேயான தொடர்பை அறிந்துகொள்வது, தீவிரமான சமயங்களில் நுண்ணுயிரிகளை வடிவமைக்கும் அம்சங்களை சிறந்த முறையில் மதிப்பிட அவசியமாகிறது” எனக் குறிப்பிட்டார்.

இ.கோலி, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த இவை மனிதக் குடலிலும் காணப்படுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இதர நுண்ணுயிரிகளைவிட இந்த பாக்டீரியா குடும்பம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த ஜெட் புரொபல்சன் ஆய்வகத்தின் நிதின் சிங் கூறுகையில்,”நுண்ணுயிரிகளின் மரபணுத் தகவல் அடிப்படையிலான கணிப்புகளுக்கும், உயிரினங்கள் இயற்கையாக நடந்து கொள்வதற்கும் இடையேயான நேரடித் தொடர்பு குறித்து ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம் மேற்கொண்ட பத்தாண்டு கால முன்னோடி முயற்சிதான் இந்த ஆராய்ச்சி.எங்கள் கணிப்புகளுக்கும், நுண்ணுயிரிகளின் பண்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆய்வகத்தில் காண முடிகிறது. எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தின்போது மருத்துவ சோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதற்கு இது வலிமை சேர்க்கிறது” என்றார்.

ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியான கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறும்போது,”மூடப்பட்டு சீலிடப்பட்ட விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் மூலம்தான் நுண்ணுயிரிகள் வெளிப்படுகின்றன. ஆயினும், விண்வெளி நிலையத்தின் சுற்றுச்சூழலை பூமியோடு ஒப்பிடுகையில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பாதகமான சுற்றுச்சூழல் நிலவரங்களால் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான தொடர்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. விண்வெளியில் நுண்ணுயிரிகள் தொடர்பான கூடுதல் அறிவு நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க உதவிகரமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர் திரிபுகளால் விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விண்வெளி வீர்ர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும் அங்கு காணப்படும் நுண்ணுயிரிகளைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்கி உள்ளது. விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள நுண்ணுயிரிகள் என்னென்ன என்பது பற்றியும், நுண் ஈர்ப்பு விசையில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்கின்றன என்பது குறித்தும் அறிந்து கொள்வதன் மூலம் விண்வெளி வீர்ர்களின் உடல்நலனைப் பாதுகாக்க தொடர்ந்து உதவிகரமாக இருக்கும்.