Government cable TV services affected: அரசு கேபிள் டிவி சேவைகளில் தடங்கள்

சென்னை: Government cable TV services affected. தனியார் நிறுவன மென்பொருள் சேவைகள் தடைபட்டதால் அரசு கேபிள் டிவி சேவைகளில் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, குறைந்த விலையில் உயர்தர கேபிள் டிவி சேவைகளைக் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 04.10.2007 அன்று துவங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் வருகைக்கு முன்னர் பல தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் (150/- முதல் 250/- வரை) மிக அதிகமான மாதாந்திர கட்டணத்தைப் பொதுமக்களிடமிருந்து வசூலித்து வந்தன.

இந்நிறுவனத்தின் மாதம் குறைந்த கட்டணத்திலான தரமான கேபிள் சேவை, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அரசு கேபிள் டிவி நிறுவனம் நேற்று முதல் (19-11-2022) தமிழ்நாடு அரசு நிறுவனத்திற்கு கேபிள் டிவி மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.