Ganesha idols are melting places: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சென்னை: Notification of places where Ganesha idols will be melted in Chennai: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் குறித்து சென்னை காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,352 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் காவல் சரகத்தில் 699 சிலைகளும் என மொத்தம் 2,554 சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள்:

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 1.சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம், 2. பல்கலைநகர், நீலாங்கரை, 3. காசிமேடு மீன்பிடி துறைமுகம், 4. திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை மேற்படி 4 இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சௌகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டிணப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, இராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடிதுறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், குன்றத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் திருவான்மியூர் வழியாக கொண்டு செல்லப்பட்டு, நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாடி மேம்பாலம் வழியாக, நியூ ஆவடி சாலை, அண்ணா வளைவு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக, வள்ளுவர் கோட்டம் சந்திப்பு வரையிலும், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், போரூர் மற்றும் சுற்றுப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் விருகம்பாக்கம், வடபழனி வழியாக வள்ளுவர் கோட்டம் வரையிலும், திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு அடைந்து, அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலும் சென்று. பின்னர் வள்ளுவர் கோட்டத்திலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை, காந்தி சிலை வழியாக சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும்.

வடசென்னை பகுதியை அடுத்த மணலி, மாத்தூர், காரனோடை, பாடியநல்லூர், செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகள் மூலக்கடை சந்திப்பு, வியாசர்பாடி, பேசின் பாலம், மின்ட் சந்திப்பு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம் வழியாக பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பொது இடங்களில் அனுமதியுடன் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட கரைப்பிடங்களில் கரைக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வழிபாடு இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் சிலைகளை கரைக்கும் இடங்களில், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை மற்றும் ஆவடி, தாம்பரம் ஆணையரகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.