Karnataka BJP MLAs : அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி: கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ள எம்எல்ஏக்கள்

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடம் சிந்திக்கவில்லை. இதனால், பாஜகவின் பல எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாஜக‌ நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்க தொடங்கி உள்ளனர்.

பெங்களூரு: (Karnataka BJP MLAs) அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருக்கும் பாஜகவிற்கு, ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருப்பவர்களுக்கும், இடையில் வந்து கட்சியில் இணைந்தவர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி ஆசை உள்ளவ‌களுக்கும் இடையே நடக்கும் சண்டையால், தற்போது கட்சிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக அமைச்சரவை விரிவாக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்த அமைச்சர் பதவி ஆசை உள்ளவ‌ர்கள் தற்போது மௌனம் சாதித்து கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது பாஜக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அமைச்சரவை விரிவாக்கம் (Cabinet expansion), அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பொங்கல், உகாதி என அமைச்சரவை மறுசீரமைப்பு காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடம் சிந்திக்கவில்லை. இதனால், பாஜக‌வின் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கத் தொடங்கி உள்ளனர். அப்படியானால், முக்கியமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல், இடம் கிடைக்காமல், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ள எம்எல்ஏக்கள் யார்? என்பதனை பார்ப்போம்.

ரமேஷ் ஜார்கிஹோலி (Ramesh Jarkiholi), அமைச்சராக இருந்தபோது ஆபாச சிடி வழக்கில் அமைச்சர் பதவியை இழந்தவர், அந்த வழக்கில் கிளீன் சிட் பெற்ற ரமேஷ் ஜார்கிஹோலி, அமைச்சர் பதவிக்காக மேலிடத் தலைவர்களை அணுகியும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் ரமேஷ் ஜார்கிஹோலி கட்சி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

மைசூரில் பாஜகவை பல‌ப்படுத்த காரணமாக இருந்த சிபி யோகேஷ்வர் (CP Yogeshwar), அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டவர். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால், சிபி யோகேஷ்வரும் பாஜகவின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் உள்ளார். ஆர்.சங்கர், ஹிரியூர் எம்எல்ஏ பூர்ணிமா ஸ்ரீனிவாஸ், அப்பாச்சு ரஞ்சன், ஆனந்த் மாமணி உள்பட பல எம்எல்ஏக்கள் மேலிடத் தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் பாஜக‌ கட்சி ஏற்பாடு செய்யவுள்ள மாவட்ட வாரியான‌ மூத்த தலைவர்களின் பயணத்தின் போதும், மாவட்டத்திற்கு வருவதில்லை என சிலர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் நான்கு கட்டமாக நளின்குமார் கட்டீல், பி.எஸ்.எடியூரப்பா (Nalinkumar Katil, PS Yeddyurappa), பசவராஜ் பொம்மை என பல தலைவர்கள் தலைமையிலான மாவட்ட சுற்றுப்பயணங்களின் போது நடைபெற உள்ள‌ கூட்டங்கள், பின்னடைவை சந்திக்கும் என பாஜக வட்டாரத்தில் பேச‌ப்படுகிறது.