Flood water enters houses in Erode: ஈரோட்டில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளநீர்: மக்கள் கடும் அவதி

ஈரோடு: Flood water enters houses in Erode. ஈரோட்டில் தொடர் கனமழை காரணமாக ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. ஈரோடு மாநகரின் ரங்கம்பாளையம் , மூலப்பாளையம், சேனாதிபதிபாளையம், சாஸ்திரிநகர் , குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகர், முத்தாம்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெள்ளத்தில் சிக்கிய அப்பகுதி பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். இதனைத்தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சிறு வணிகர்களின் கடைகளுக்கும் மழை வெள்ளநீரானது புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்து வியாபாரம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும், நேற்று இரவு ரங்கம்பாளையத்திலிருந்து முத்தாம்பாளையம் செல்லும் ரயில்வே நுழைவு சுரங்க பாதையில் மழை வெள்ளநீரில் கார் சிக்கியது. இதனால் காரில் பயணம் செய்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது, வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை வெள்ளநீர் தேங்கி நின்றதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.