Flood warning in Manchalaru Dam: மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: Flood warning in Manchalaru dam: தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி அரண்மனைப்புதுாரில் 39 மி.மீ., ஆண்டிபட்டியில் 60.8 மி.மீ., போடியில் 21.6 மி.மீ., கூடலுாரில் 10.8 மி.மீ., மஞ்சளாறில் 58 மி.மீ., பெரியகுளத்தில் 34 மி.மீ., பெரியாறு அணையில் ஒரு மி.மீ., தேக்கடியில் 50.8 மி.மீ., சோத்துப்பாறையில் 28 மி.மீ., உத்தமபாளையத்தில் 17.6 மி.மீ., வைகை அணையில் 66.8 மி.மீ., வீரபாண்டியில் 68 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3500 கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்கு 69 கனஅடி தண்ணீர் மட்டுமே விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 68.14 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று மாலை இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் வாய்ப்புகள் உள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளவு 57 அடியாக உள்ளதால், அணை நிரம்பும் வாய்ப்புகள் உள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 1800 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1667 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 134.20 அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் ,பவானிசாகர் அணையின் இன்றைய (01.08.2022) நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.45 டிஎம்சியாவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 2,953 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 3,180 கன அடி) .

அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 605 கன அடி. இதில் பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 17.6 மி.மீ மழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பெருந்துறை, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சத்தியமங்கலம் பகுதிகளில் கன மழை பெய்தது.

இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஈரோடு – 11.0 மி.மீ , பெருந்துறை – 70.0 மி.மீ , கோபி – 36.0 மி.மீ , தாளவாடி – 6.2 மி.மீ , சத்தியமங்கலம் – 30.0 மி.மீ , பவானிசாகர் – 17.6 மி.மீ , பவானி – 3.80 மி.மீ , நம்பியூர் – 17.0 மி.மீ , சென்னிமலை – 32.0 மி.மீ, மொடக்குறிச்சி – 22.0 மி.மீ , கவுந்தப்பாடி – 40.0 மி.மீ , எலந்தகுட்டைமேடு – 18.2 மி.மீ , கொடிவேரி – 40.0 மி.மீ , குண்டேரிப்பள்ளம் – 49.2 மி.மீ , வரட்டுப்பள்ளம் – 8.0 மி.மீ என மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு – 401.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு – 23.0 மி.மீ மழை பதிவானது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120.100 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.630 டி.எம்.சியாகவும், நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாவும் உள்ளது. அணையிலிருந்து 41,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.