Firecracker godown explosion: திண்டுக்கல் அருகே பட்டாசு குடோன் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: Two people died miserably after being caught in the rubble of a firecracker godown explosion near Dindigul. திண்டுக்கல் அருகே பட்டாசு குடோன் வெடித்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த உள்ள புல்வெட்டி கண்மாய் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இந்து முன்னணியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் கடந்த 10 ஆண்டுளாக பட்டாசு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த பட்டாசுக் கடைக்கு மேல் மாடியில் ஜெயராம் வயது (40), அவரது மனைவி நாகராணி (35) மற்றும் தீபிகா வயது (7) கனிஷ்கா வயது(5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் மோகன் வயது (4) என்ற மகனும் வசித்து வந்தனர்.

இந்த கடையில் நேற்று மாலை ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகிய இருவரும் வீட்டில் தான் இருந்துள்ளனர். அவர்களது இரு குழந்தைகளும் மாடிக்கு கீழே சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென குடோனில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடையை ஒட்டி இருந்த வணிக வளாகம் மற்றும் கடையின் மேல் மாடியில் இருந்த வீடு இடிந்து முற்றிலும் சேதமானது. கட்டிட இடிபாடுகளுக்குள் கடையின் உரிமையாளர் ஜெயராமன் மற்றும் அவரின் மனைவி நாகராணி ஆகிய இருவரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியில் 4 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மாலை 5:30 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடி விபத்து சம்பவத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் நேரில் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.