Edappadi Palaniswami strongly condemned: ஓசூர் போராட்டம்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: Leader of the Opposition Edappadi Palaniswami strongly condemned the use of sticks on people during the protest held in Hosur. ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.

இதனையடுத்து முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என எருதுவிடும் விழாவிற்கு போலீசார் தெரிவித்தனர். இதனால் இளைஞர்கள் மற்றும் போலிசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், எருது விடும் விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என கற்களை குவித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து, தற்போது எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது எருது விடும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருவதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால் கோபசந்திரம் பகுதியில் போராட்டகாரர்கள் விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, கோபசந்திரம் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. பிறகு ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். காவல்துறையினரின் இந்த 2 மணி நேர முயற்சிக்கு பிறகு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டு அனைவரும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு அனுமதி பெற்று நடத்தப்படும் எருது விடும் விழாவில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் எருது விடும் விழாவை காணவந்தவர்கள் மீது மாடு முட்டியதில் ஒருவரின் கை முறிவு ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து,ஹோசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.